< Back
மாநில செய்திகள்
கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேசுவரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேசுவரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:15 AM IST

நாளை புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கூட்டநெரிசலை சமாளிக்க ராமேசுவரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.

ராமேசுவரம்,

நாளை புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கூட்டநெரிசலை சமாளிக்க ராமேசுவரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.

ராமேசுவரம் கோவில்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக இந்த நாட்களில் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. புரட்டாசி மாத மகாளய அமாவாசையாக இருப்பதால் நாளை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தடுப்பு கம்புகள்

இதனிடையே பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ராமேசுவரம் கோவிலின் உள்பகுதியான மூன்றாம் பிரகாரம், சுவாமி சன்னதிப் பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம் பல இடங்களில் பக்தர்கள் வரிசையில் நின்று செல்லும் வகையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் பக்தர்கள் வரிசையில் நின்று தீர்த்தமாட செல்ல வசதியாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து வடக்கு கோபுர வாசல் வரையிலும் தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டுள்ளன. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாள் அன்று திதி பூஜை செய்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் என்று கூறப்படுகின்றது. இதனால் நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்