< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது தாக்குதல்
மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
16 July 2024 3:59 AM IST

ராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது கோவில் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசிக்க பீகார் மாநிலத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் நேற்று வந்திருந்தனர். 3-ம் பிரகாரத்தின் மைய வாசல் வழியாக உள்ளே சென்றனர். 25 பேர் வந்ததில் பாதி பேர் உள்ளே சென்ற நிலையில் மீதி பக்தர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த கோவில் பணியாளர்கள் இப்பாதையில் செல்ல அனுமதி இல்லை என்றும், டிக்கெட் எடுத்தால் மட்டுமே அனுமதி என கூறியதாக தெரிகிறது. இதனால் பக்தர்கள், பணியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. தொடர்ந்து கோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி தலைமையிலான போலீசார் வடமாநில பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவில் பணியாளர்கள் 5-க்கும் மேற்பட்டோர் திடீரென வடமாநில பக்தர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பக்தர் நிகில்குமார் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி கையிலும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். ராமேசுவரம் கோவிலில் போலீசார் முன்னிலையில் பக்தர்கள் மீது கோவில் பணியாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பா.ஜனதா உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்