ராமநாதபுரம்
ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
|புயல் சின்னத்தை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
புயல் சின்னத்தை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம்
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 400-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போல் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
தனுஷ்கோடி மற்றும் பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. இதனால் தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் தடுப்புச் சுவரின் கற்களில் அமர்ந்து கடல் அலையை வேடிக்கை பார்த்தபடி செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கடல் சீற்றமாக இருப்பதால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.