< Back
மாநில செய்திகள்
13 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
மாநில செய்திகள்

13 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

தினத்தந்தி
|
14 Nov 2022 11:09 AM IST

போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, வானிலை சீரான நிலையில் 13 நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த 5-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை 2 படகுகளோடு இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரியும் ராமேசுவரத்தில் கடந்த 6-ந்தேதி முதல் பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு வானிலை சீரான நிலையில் 13 நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இன்று காலையில் மீன்பிடி உபகரண பொருட்களை சேகரித்துக்கொண்டு மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்கு புறப்பட்டனர்.

இதனால் இன்று காலை முதலே ராமேசுவரம் துறைமுகம் பரபரப்பானது. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதேபோல் 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் 1500-க்கு மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மேலும் செய்திகள்