ராமநாதபுரம்
கூடை, கூடையாக மீன்களுடன் கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள்
|கூடை, கூடையாக மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினர். வியாபாரிகள் குவிந்ததால் துறைமுகம் களை கட்டியது.
ராமேசுவரம்,
கூடை, கூடையாக மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினர். வியாபாரிகள் குவிந்ததால் துறைமுகம் களை கட்டியது.
மீன்பிடி தடைகாலம்
தமிழகத்தில் விசை படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இதனிடையே தடைகாலம் முடிந்த நிலையில் 2 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து கடந்த 16-ந்தேதி மதியம் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் 4,000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
வியாபாரிகள் குவிந்தனர்
இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை அனைத்து படகுகளுடன் கரை திரும்பினர். இதில் ஒவ்வொரு படகுகளும் சராசரியாக இறால் மீன்கள் 200 கிலோ, கணவாய் 100 கிலோ, நண்டு 100 கிலோ, சங்காயம் மீன்கள் 1 டன் கிடைத்திருந்தது.
மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களையும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். கடந்த 2 மாத காலமாக மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்த ராமேசுவரம் துறைமுகம் கடற்கரை பகுதி நேற்று மீனவர்கள், வியாபாரிகள் கூட்டத்தால் திருவிழா போல் களைகட்டி காணப்பட்டது.
இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், சேசு ராஜா ஆகியோர் கூறியதாவது:-
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்று வந்த நிலையிலும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு விசைப்படகிலும் சராசரியாக 200 கிலோ வரை இறால் கிடைத்துள்ளன. கணவாய், நண்டு சுமார் 100 கிலோ வரை கிடைத்துள்ளன. இதைத்தவிர அவுலி, சங்காயம் 1 டன் வரை மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இறால் மீன்கள் வரத்து குறைவுதான்.. கடந்த ஆண்டு ஒவ்வொரு படகிலும் சராசரியாக இறால் மீன்கள் 300 முதல் 400 கிலோ வரை கிடைத்தன. இந்த ஆண்டு இறால் மீன்கள் 200 கிலோ மட்டுமே கிடைத்தன.
விலை நிர்ணயம்
மேலும் மீன்கள் ஏற்றுமதி நிறுவனத்தினாலோ, வியாபாரிகளாலோ விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதுவும் மீனவர்களுக்கு ஏமாற்றம் தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் இறால் மீன்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இந்த ஆண்டும் மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்களுக்கு தற்போது வரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.