ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை
|ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கடல் காற்று அதிகமாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தொண்டி, மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
திடீர் தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலையும் ராமேசுவரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
பாம்பனில் கடற்கரையில் உள்ள குடிசை வீடுகளில் கடல் தண்ணீர் புகுந்தது. சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.