நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு
|கடந்த 5-ந்தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த பி.எம்.சரவணனுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் மேயர் பதவிக்கு 25-வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பாளையங்கோட்டை 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 54 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனா். ஒரு வாக்கு செல்லாத வாக்காகி விட்டது. இதன் மூலம் 7 வாக்குகள் வித்தியாசத்தில் மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். ராஜாஜி மண்டபத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.