திருச்சி
ராமஜெயம் கொலை வழக்கு: பா.ம.க. பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை
|ராமஜெயம் கொலை வழக்கில் பா.ம.க. பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
ராமஜெயம் கொலை வழக்கு
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்று படுகையில் வீசி சென்றிருந்தனர்.
இந்த கொலை வழக்கை ஸ்ரீரங்கம் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வழக்கில் கொலையாளிகள் யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தினார்கள்.
பா.ம.க. பிரமுகரிடம் விசாரணை
அதிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகரான பிரபு என்ற ஆம்புலன்ஸ் பிரபுவிடம் (வயது 45) கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். ராமஜெயத்தை அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் கடத்தி சென்ற கார் குறிப்பிட்ட மாடல் வகையை சேர்ந்தது என சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஏற்கனவே விசாரணையில் கண்டறிந்து இருந்தனர்.
இந்தநிலையில் அதே மாதிரியான காரை பா.ம.க. பிரமுகரான பிரபு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில் குறிப்பிடும்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் பா.ம.க. பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் பறித்த வழக்கில் கைது
சிறப்பு புலனாய்க்குழுவினர் விசாரணை நடத்திய பா.ம.க. பிரமுகரான பிரபுவுக்கும், திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கும்(49) முன்விரோதம் இருந்து வந்தது. ராமகிருஷ்ணன் 4 சக்கர வாகன பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணன் சாமி கும்பிட புத்தூர் நால்ரோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த பிரபு கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.3,800-ஐ பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பிரபுவை அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.