< Back
மாநில செய்திகள்
வி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

வி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
21 Nov 2023 3:15 AM IST

வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

"மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் நினைவுநாளான வரும் 27-ஆம் நாள் சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை தமிழக அரசின் சார்பில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 20-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட போதே அதை நான் வரவேற்றேன். இப்போதும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமது உருவச்சிலை அமைக்கப்படுவதை உணர முடிந்தால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட 100 மடங்கு கூடுதல் மகிழ்ச்சியை, தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருந்தால், வி.பி.சிங் அடைந்திருப்பார். ஒருபுறம் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் உருவச்சிலையை திறந்து கொண்டு, இன்னொருபுறம் மாநில அரசின் சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று தமிழக அரசு கூறுவது "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் தான் அமையும்.

வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார். அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். வி.பி.சிங் அவர்களின் குரலைத் தான் நான் ஒலித்துக் கொண்டிருக்கிறேன். சமூகநீதியின் அடிப்படைகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் இப்போதாவது புரிந்து கொண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளை விட சிறந்த தருணம் இருக்க முடியாது. எனவே, வி.பி.சிங் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், அதற்காக முதலமைச்சரை வி.பி.சிங் அவர்களின் ஆன்மா வாழ்த்தும்; இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெருந்துரோகம் செய்தவர்களை மன்னிக்காது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்