< Back
மாநில செய்திகள்
ரம்ஜான் சிறப்பு தொழுகை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ரம்ஜான் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
23 April 2023 12:15 AM IST

ரம்ஜான் சிறப்பு தொழுகை

கோவை

கோவையில் முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று காலை முதல் சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் உள்ள 40 ஈத் மைதானங்கள் மற்றும் 313 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை நடந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

கோவை வேளாண் கல்லூரி பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத் பொதுச்செயலாளர் முகமது அலி, பீளமேடு ஈத்மைதான பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் அப்துல் ஹக், ரத்தனபுரி தாருல் குர்-ஆன் பள்ளிவாசலில் முன்னாள் தலைவர் காஜாமொய்தீன், ராம்நகர் பள்ளிவாசலில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. ஜப்பார், அல்அமீன் காலனி பள்ளிவாசலில் ஐக்கிய ஜமா-அத் பசீர் அகமது, காந்திபுரம் பள்ளிவாசலில் ஹமீம், கரும்புக்கடையில் லத்தீப், ஆத்துப்பாலம் பள்ளிவாசலில் அபுபாரூக் உள்பட அந்தந்த பள்ளிவாசல்களில் ஜமா-அத் தலைவர்கள் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் பெண்களுக்கு என்று தனி இடமும், சில பள்ளிவாசல்களில் பெண்களுக்கு என்று தனியாகவும் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

அன்பை பரிமாறினர்

ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் ஏழை-எளிய மக்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்துகளும் பரிமாறப்பட்டது. சில இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத் பொதுச்செயலாளர் எம்.ஐ.முகமது அலி கூறும்போது, கோவை மாவட்டத்தில் 40 ஈத் மைதானங்கள், 313 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் அவரவர், தங்களின் நண்பர்கள், அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களுக்கு விருந்துகளை பரிமாறினார்கள் என்றார்.

மேலும் செய்திகள்