'ராமர் தீவிரமான அசைவ பிரியர்' - ராமாயணத்தை மேற்கோள் காட்டி கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பதிவு
|நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணம் குறித்து பேசும் வசனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சென்னை,
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அன்னபூரணி'. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.
ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், 'உணவு விஷயத்தில் கொந்தளித்துபோன் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்' எனப் பதிவிடுள்ளார். மேலும் அவர், 'வால்மீகி எழுதிய ராமாயணத்தில் பல இடங்களில் ஸ்ரீராமன் தீவிரமான அசைவப் பிரியர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ராமன் வனவாசம் போக வேண்டும் என்ற நிலைவந்த போது ராமன் வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான் 'அம்மா நான் ராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வேண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும்' என்று கூறியதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.