மத்திய அரசை கண்டித்து பேரணி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனுவை பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|மாநிலம் முழுவதும் பேரணிக்கு அனுமதி கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனுவை பரிசீலித்து 7 நாட்களுக்கு தகுந்த முடிவை எடுக்கும்படி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டும், மத்திய அரசின் மதவாதக் கொள்கைகளைக் கண்டித்தும், நாளை (சனிக்கிழமை) முதல் 30-ந்தேதி தேதி வரை மாநிலம் முழுவதும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதிக் கேட்டு தமிழ்நாடு டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மனு கொடுத்தார். அனுமதி எதுவும் வழங்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் உதயகுமார், ''இதுபோன்ற பேரணிக்கு மாநிலம் முழுவதுதற்கும் டி.ஜி.பி., அனுமதி வழங்க மாட்டார். இதுகுறித்து மனுதாரருக்கு கடந்த 17-ந்தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தந்த மாநகர, மாவட்ட, தாலுகா அளவில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்வார்கள். எனவே, மனுதாரர் அந்தந்த போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுக்கவேண்டும்'' என்று கூறினார்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ''மனுதாரர்கள் உள்ளூர் போலீசாரிடம் பேரணிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் மனுவை போலீசார் பரிசீலித்து 7 நாட்களுக்குள் அனுமதி வழங்குவது குறித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை மனுதாரர்கள் கேட்கும் நாளில் பாதுகாப்பு வழங்குவதில் ஏதாவது இடையூறுகள் இருந்தால் மாற்று தேதிகளில் அனுமதி வழங்கலாம்'' என்று உத்தரவிட்டார்.