முதல்-அமைச்சர் சொல்லியே ரஜினிகாந்த் பேசியுள்ளார் - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
|விரைவில் அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் சொல்லியே நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீனியர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற முதல்-அமைச்சர் சொல்லியே நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ஸ்டாலின் நினைத்ததை ரஜினிகாந்த் சொல்கிறார். அதை வழிமொழிந்து அவரது மகனும் கூறியுள்ளார். துரைமுருகன் போன்ற மூத்தவர்கள் வெளியேற வேண்டும் என ரஜினிகாந்தை பேச வைத்திருக்கிறார்கள்.
ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு, அண்ணாமலைக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது, தமிழகத்தில் தான்தோன்றித்தனமாக பேசும் காரணத்தால், தலைமை பொறுப்பு தமக்கு இருக்காது, எனவே இருக்கின்ற வரையில் எதையாவது கருத்தை சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைக்கிறார் அண்ணாமலை. நிச்சயமாக தலைமை உணர்ந்து, விரைவில் அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள்.
அதிமுகவில் எந்த பிளவும் இல்லை.. சிதறலும் இல்லை.. ஈ.பி.எஸ். தலைமையின் கீழ் ஒன்றாக செயல்படுகிறோம். சூழலுக்கு ஏற்பவே கூட்டணி அமைக்கப்படுகிறது. 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் யார், யார் வருகிறார்கள் என்பதை பொறுத்து கூட்டணி அமையும்" என்று அவர் கூறினார்.