தேனி
'ராஜவாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும்'
|ராஜவாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்று தேனி அல்லிநகரம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 30-வது வார்டு கவுன்சிலர் சந்திரமோகன் பேசும்போது, ராஜவாய்க்கால் தூர்வாரப்படாததால் திட்டச்சாலையிலும் தண்ணீர் தேங்கும் நிலைமை உருவானது. தற்போது மீண்டும் இந்த வாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கி இருக்கிறது. இந்த பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். முழுமையாக வாய்க்காலை தூர்வார வேண்டும். ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதேபோல் 27-வது வார்டு கவுன்சிலர் அய்யனார்பிரபு பேசும்போது, ராஜவாய்க்கால் தூர்வார எவ்வளவு நிதி செலவு ஆனது என்பதை தெரிவிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார். பின்னர், ராஜவாய்க்கால் தூர்வாரும் பணிக்கு 9 லட்சத்து 80 ஆயிரம் செலவாகி இருப்பதாக நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, ஆணையாளர் வீரமுத்துக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.