சென்னை
சென்னை சென்டிரலில் ரூ.1½ கோடி நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் பிடிபட்டார் - ரெயில்வே போலீசார் விசாரணை
|சென்னை சென்டிரலில் ரூ.1½ கோடி நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் பிடிபட்டார். அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் ரெயில் நிலைய வளாகங்களை ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கிறார்கள். அனைத்து ரெயில் நிலையங்களிலும் வௌிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்துகொண்டிருந்த பயணி ஒருவரின் உடைமையை சோதனை செய்தனர்.
அப்போது அந்த உடைமையின் உள்ளே ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜின்வா மாவட்டத்தை சேர்ந்த மகேந்தர் சைனி (வயது 30) என்பது தெரியவந்தது. மகேந்தர் சைனி வைத்திருந்த பையில் 2 கிலோ 680.210 கிராம் எடை கொண்ட தங்க நகைகள், வைர கம்மல் மற்றும் வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகைகள் தொடர்பான ஆவணங்களை அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவரிடம் இருந்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்ப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 56 லட்சத்து 12 ஆயிரத்து 379 ஆகும். மகேந்திர சைனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேந்திர சைனி தங்கம் மற்றும் வைர நகைகளை யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்தார்? எங்கிருந்து இந்த நகைகளை எடுத்து வந்தார்? அவரிடம் கொடுத்தது யார்? சென்னையில் அவரிடம் இருந்து நகைளை பெற இருந்த முக்கிய புள்ளி யார்? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.