விருதுநகர்
துப்பாக்கி சுடும் போட்டிக்கு ராஜபாளையம் வீரர் தேர்வு
|கேரளாவில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள ராஜபாளையம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி,
கேரளாவில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள ராஜபாளையம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிசுடும் போட்டி
திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான துப்பாக்கிசுடும் போட்டி கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் சிவகாசியில் உள்ள விருதுநகர் மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்று வரும் ராஜபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்தரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அதற்கான நடைமுறைகள் தெரியவில்லை. பின்னர் பட்டபடிப்பு முடித்தவுடன் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்றேன். அங்கு ஒரு வருடம் மட்டுமே வேலை செய்தேன். பின்னர் அங்கிருந்து இந்தியா திரும்பியதும் துப்பாக்கிசுடும் போட்டியில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ள பயிற்சியில் ஈடுபட்டேன்.
வெள்ளி பதக்கம்
தினமும் 5 மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்குகிறேன். 2007-ல் கோவையில் நடைபெற்ற துப்பாக்கிசுடும் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றேன். அதன் பின்னர் மதுரை, சென்னை, திருச்சி போன்ற இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள் பெற் றுள்ளேன்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் தற்போது தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம்
இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வேன். அடுத்து இந்திய அணியில் இடம்பெற தேவையான தகுதியை வளர்த்துக்கொள்வேன். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் லட்சியம். அதை நோக்கி எனது பயணம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ள துப்பாக்கி சுடும் வீரர் ரவிச்சந்தருக்கு சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் வாழ்த்து தெரிவித்தார்.