ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி - நேரில் பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|அண்ணா நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
சென்னை,
மூதறிஞர் ராஜாஜியின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
ஓசூரில் 1878-ம் ஆண்டு பிறந்த ராஜாஜி, வக்கீலாக தன்னுடைய பணியை தொடங்கியவர். மதுவிலக்குக்கு எதிராகவும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியவர். சென்னை மாநில முதல்-அமைச்சராகவும் அதேபோல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர்.
மூதறிஞர் ராஜாஜியின் பயணங்களை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழகத்தின் செய்தித்துறை சார்பில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியானது நேற்றைய தினம் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.