திருவாரூர்
ராஜகோபாலசாமி கோவில் தெப்பத்திருவிழா
|மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகோபாலசாமி கோவில்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடக்கும் கோவிலான இங்கு ஆனி மாதம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாநாட்களில் ராஜகோபாலசாமி கருடவாகனம், யானை வாகனம் என தினமும் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்தார்.
தெப்பத்திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் நடத்தும் தெப்பத்திருவிழா நேற்று ஹரித்திரா நதி தெப்பக்குளத்தில் நடந்தது. முன்னதாக .ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக வந்தார். பின்னர் ருக்மணி, சத்யபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதற்காக தெப்பம் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தெப்பத்திருவிழாவை காண மன்னார்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளானபக்தர்கள் திரண்டதால் மன்னார்குடி நகரமே விழாக்கோலம் பூண்டது.
போலீசார் பாதுகாப்பு
விழாவிற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், செயலாளர் ஏ.பி.அசோகன், அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி.கருணாநிதி, பொருளாளர் பிரபாகரன் மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன், வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர். மன்னார்குடி போலீசார் ஹரித்ராநதி தெப்பக்குளம் மற்றும் சுற்று பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.