திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை சூழ்ந்த மழைநீர் - மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
|கனமழை காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்தது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் மூலம் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.
கோவிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது திருக்கடையூரைச் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்பதன் காரணமாக, கிராம மக்களின் நலன் கருதி நீர் வெளியேற்றும் பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கிராமங்களைச் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்த பின்னர், மீண்டும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் தேங்கி உள்ள நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.