சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அருவி போல கொட்டிய மழைநீர்: பயணிகள் அவதி
|சென்னையில் இருந்து கோவை சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது.
சென்னை,
சென்னை சென்டிரலில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவை சென்றடையும்.
வழக்கம் போல் நேற்று சென்னையில் இருந்து கோவை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. கோவை பீளமேடு அருகே ரெயில் செல்லும்போது கோடை மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 'சி - 7' பெட்டியில் திடீரென மழை நீர் ஒழுகியது. ரெயில் பெட்டியில் இருந்த மின்விளக்கின் மேற்புற பகுதியில் இருந்த மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்தது. இதனால், அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து, பயணிகள் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று வெளியிட்டனர்.
இது குறித்து விளக்கம் அளித்த ரெயில்வே அதிகாரிகள், 'சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் மட்டுமே மழைநீர் கசிந்தது. சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்ததும் குறிப்பிட்ட ரெயில் பெட்டியின் பழுது சரிசெய்யப்படும்' என்றார்.