திருவாரூர்
நிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு அவசியம்
|நிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு என்பது மிக அவசியம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
நிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு என்பது மிக அவசியம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
மழைநீர் சேகரிப்பு
திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகிற்கு மிக ஆதாரமாக அமைவது நீர் தான். இத்தகைய நீர் நமது பூமியில் இருந்து பல வழிகளில் கிடைத்தாலும், இதில் பெரும் பங்கு வகிப்பது மழை நீர் தான்.
மாவட்டம் முழுவதும்...
மழை நீரை சேமிப்பதன் மூலம் வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். நிலத்தடி நீரை பாதுகாத்திட மழை நீர் சேகரிப்பு என்பது மிக அவசியமாகும். மழை நீர் சேமிப்பது குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு, குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றிட வேண்டும். மாவட்டம் முழுவதும் 5 நாட்கள் இந்த விழிப்புணர்வு குறும்படம் அனைத்து பகுதிகளிலும் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு குறும்படம்
முன்னதாக ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி சாரண, சாரணியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் தமிழரசன், உதவி நிலநீர் வல்லுனர் லட்சுமனன், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.