< Back
மாநில செய்திகள்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
நீலகிரி
மாநில செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
20 Oct 2023 2:45 AM IST

ஊட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது. பேரணியை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக சென்று ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்துகொண்டனர்.

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்படங்களை பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் பார்வையிட்டு, வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், ஆர்.டி.ஓ. மகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுதாகர், உதவி பொறியாளர் சங்கீதா, துணை நிலநீர் வல்லுநர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்