< Back
மாநில செய்திகள்
மழை நீரை சேமிப்போம், அடுத்த தலைமுறையை காப்போம்...!
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மழை நீரை சேமிப்போம், அடுத்த தலைமுறையை காப்போம்...!

தினத்தந்தி
|
19 Oct 2022 5:00 AM IST

அடுத்த தலைமுறையை காக்க மழை நீரை சேமிப்போம்.

இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுக்கான தேவை மட்டுமின்றி, நீருக்கான தேவையையும், அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

உணவை உற்பத்தி செய்துவிடலாம், ஆனால் தண்ணீரை!... என்னதான், உலகம் அறிவியல் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், மனிதனால் உற்பத்தி செய்ய முடியாத பொருளாக இருப்பது குடிநீர். அதனால் தான், 'நீரின்றி அமையாது உலகு' என்று திருவள்ளுவர் செல்லி இருக்கிறார்.

குடிநீரின் முக்கிய ஆதாரம் மழைதான். வான்மேகங்கள் நமக்கு அளிக்கும் மழையை கொண்டு தான், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

நிலத்தில் பெய்யும் மழையில் சராசரியாக 40 சதவீதம் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலக்கிறது. 35 சதவீதம் ஆவியாகிறது. 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்திற்கும், 15 சதவீதம் மட்டுமே பூமி உறிஞ்சுகிறது.

90 சதவீதம் நிலத்தடி நீர் தான்

நிதி ஆயோக்கின் மதிப்பீட்டின் படி இந்தியாவின் நிலத்தடி மேற்பரப்பு நன்னீர் கிட்டத்தட்ட 70 சதவீதம் அசுத்தமானதாக உள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்படுவதாலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தண்ணீரில் கலப்பதாலும் நீர்நிலைகள் மாசு அடைகின்றன.

நாட்டில் அசுத்தமான குடிநீர் உட்கொள்வதால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் இறப்புகள் ஏற்படுவதாக நிதி ஆயோக் அளித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே நாம் தான் நிலத்தடிநீரை அதிகம் பயன்படுத்துபவர்களாக உள்ளோம். நகர்ப்புற மக்களின் குடிநீர் தேவையில் 90 சதவீதம், நிலத்தடி நீரை சார்ந்து தான் இருக்கிறார்கள். தற்போதுள்ள ஆழ்துளை கிணறுகள் இன்னும் எத்தனை காலம் தாக்கு பிடிக்கும் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு சில ஆண்டுக்கு பின்னர் வறண்டு வெற்றிடம் தான் ஏற்படும்.

இத்தகைய நிலையை தவிர்க்க, நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க என்ன வழிகளை முன்னெடுத்தோம் என்பதையும் இந்த நேரத்தில் சற்று யோசித்து பார்க்க வேண்டும். வீட்டுக்கு வீடு நாம் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைத்து, நிலத்தடி நீரை நித்தமும் உறிஞ்சுகிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அந்த நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கான மழைநீர் சேகரிப்பை பின்பற்றுகிறோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் இது.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல அரசு அலுவலகங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் தூசிகள் படர்ந்து தூர்ந்து போய் கிடக்கிறது. இந்த தூசுகளையும் தட்ட வேண்டிய நேரம் இது. ஏனெனில் இது பருவமழை காலமாகும்.

மாதந்தோறும் கணக்கெடுப்பு

தமிழக நீர்வள ஆதாரத்துறையினர் மாநிலம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டத்தைக் கணக்கிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலத்தடி நீர் மட்டம் 5.99 மீட்டராக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் 3.92 மீட்டராக உயர்ந்துள்ளது.

அதே போல், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் 4.31 மீட்டராக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 4 மீட்டராக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 6.54 மீட்டராக இருந்த நீர்மட்டம் 4.14 ஆக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்வுக்கான காரணம், 3 மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்தது. மழை கைகொடுக்காமல் இருந்தால் இதில் பாதிப்பு ஏற்படும் நிலையும் உருவாகலாம்.

இதேநிலையில் கடந்த 2016 மற்றும் 17-ம் ஆண்டுகளில் பருவமழை இயல்பை விட குறைவாகவே தமிழகத்தில் பதிவானது. அப்போது, 2017- ஏப்ரல் மாதத்தில் கடலூர் மாவட்டத்தின் நீர்மட்டம் 7.27 மீட்டராகவும், விழுப்பரம் மாவட்டத்தில்(கள்ளக்குறிச்சி பிரிக்கப்படவில்லை) 9.37 மீட்டராகவும் இருந்தது. எனவே வருண பகவான் கை கொடுக்கும் வரையில் பிரச்சினை இல்லை, கை விரித்தால் நிலத்தடி நீருக்கான தேடல் அதிகரிக்கும், நீரும் அதளபாதாளத்துக்கு சென்று, தண்ணீருக்கான சண்டையும் தொடங்கிவிடும்.

நீர் ஆதாரத்தை பெருக்குதல்

அதோடு, நிலத்தடி நீர் மட்டம் என்பது மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. ஏனெனில் பல இடங்களில் ஆயிரம் அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறு அமைத்தும் இன்றும் தண்ணீர் வராத நிலையே இருக்கிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பெரு நிறுவனங்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

நீரை பூமியில் தேடக்கூடாது அதை வானத்தில் இருந்து பெற வேண்டும் என்று நம்மாழ்வார் சொல்வதுண்டு. அதற்கேற்ப நமது செயல் அமைய வேண்டும். தமிழகத்துக்கு பெரிதும் கைகொடுப்பது வடகிழக்கு பருவமழை தான். இந்த மழையை சார்ந்து தான் மாநிலமே உள்ளது. மழை பொய்த்து போனால், வறட்சி தான். குடிநீருக்கே தகிடதம் போட வேண்டிய நிலைதான். இது கடந்த காலங்களில் கூட நடந்துள்ளது. இதற்கு ஒரே தீர்வு வான்மழையை பூமிக்குள் சேகரித்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குவேத ஆகும்.

மழைநீர் சேகரிப்பு திட்டம்

அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டார். அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் எங்கும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்று அவர் சட்டம் கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். அதற்கு கை மீது பலன் என்கிற நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. ஆனால் அதன்பின்னர் இந்த திட்டத்தை யாரும் கையில் எடுக்கவில்லை.

இன்றும் மழைநீர் சேமிப்போம் என்று ஆட்டோ, வாகனங்களில் எழுதி கொண்டு வருகிறோமே தவிர யாரும் அதை சேமிக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவில்லை.

கடலூரில் சாதனை நிகழ்வு

ஆனால், கடலூர் மாவட்டத்தில் சத்தமே இல்லாமல் ஒரு சாதனை நிகழ்ச்சியாக மழைநீர் சேகரிப்பு பற்றிய நிகழ்வு அரசு அலுவலகங்களில் நடந்துள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி 29-ந்தேதிக்குள் ஒரு வாரத்தில் 14 ஒன்றியங்களில் 683 ஊராட்சிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் 1465 மழைநீர் சேகரிப்பு தொட்டி உருவாக்கப்பட்டது. இந்த சாதனை நிகழ்வில், உரை கிணறுகள் மூலம் மழைநீர் நேரடியாக பூமிக்குள் செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர செய்வதே இதன் நோக்கமாகும். மேலும் குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதே இதன் நோக்கம்.

இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்க தக்கது என்பதுடன், அவசியமான ஒரு சாதனை நிகழ்வாகும். ஆனால் இதோடு மட்டும் நிற்காமல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க இருப்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை கொண்டு சென்று அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க செய்ய வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடுகள் இன்றி வாழ முடியும்.

இன்றைய மழைநீர் சேகரிப்பு, அடுத்த தலை முறைக்கான சொத்து ஆகும். இதை உணர்ந்து வான்மழை துளிகளை இக்கணம் முதல் சேகரிக்க தொடங்குவோம், வாங்க!


நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்பு அவசியம்

இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மற்றும் மேம்பாட்டு மையம் தலைவர், சுற்றுச்சூழல் ஆர்வலர் தி. அருள்செல்வம் நம்மிடையே கூறியதாவது:-

கடந்த காலத்தில், மழை நின்று நிதனமாக பெய்யும், பூமியில் தண்ணீர் தேங்கும், இதனால் பூமிக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் தற்போது ஒரு மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக அடித்து பெய்து சென்றுவிடுகிறது. தண்ணீரும் பூமிக்குள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு காரணம் பருவநிலை மாற்றமே.

அதேபோல், நம்மிடையே நிலப்பயன்பாடு மாற்றமடைந்துள்ளது. அதாவது, வளர்ச்சி என்கிற பெயரில் வீட்டுமனைகளாகி போனதால், திறந்தவெளி நிலம் இல்லாமல் போனது. இது நிலத்தடி நீர் சேரவிடாமல் செய்கிறது.

அதை தொடர்ந்து 3-வது முக்கிய பிரச்சினையாக இருப்பது ஏற்கனவே இருந்த வேளாண்மை முறை ஆகும். மேல் நில நீர்களை (குளம், குட்டை) பயன்படுத்திய நிலை மாறி, இன்று முழுக்க நிலத்தடி நீரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையாகி விட்டது.

ஆழ்துளை கிணறுகளை 2 அயிரம் அடி வரைக்கும் போடும் போது பெரிய அளவில் பாதிப்புகள் வருகிறது. இதை வரையரை செய்து, தடை செய்ய வேண்டும்.

தொழில்முறை சார்ந்த பயன்பாட்டுக்கு கடல் நீர், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

வீடுகள் தோறும் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும். இதை கடுமையாக நடைமுறை படுத்த வேண்டும். இது எந்த ஆட்சி கொண்டு வந்த திட்டம் என்று பார்க்க வேண்டாம்.

ஏனெனில் இது குடிநீர் தொடர்பான பிரச்சினை. இன்று அதிகப்படியான நுகர்வு கலாசாரம் இருக்கிறது. நிலத்தடியில் இருந்து தண்ணீரை எடுத்து வீணடிக்கிறோம்.

எந்த ஒரு பொருட்கள் உற்பத்தியாக இருப்பதற்கு பின்னால் தண்ணீர் தான் உள்ளது. அந்த பொருளை வீணாக்கினால் எத்தனை ஆயிரம் தண்ணீர் வீணாகிறது என்று யாருக்கும் தெரியாது.

எனவே மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பள்ளியில் இருந்தே தொடங்கி இந்த விழிப்புணர்வு வர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சொத்து கொடுப்பது மட்டும் முக்கியம் அல்ல. அவர்கள் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். அந்த பொறுப்பை மக்களும், அரசும் சரி உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

மழைநீர் சேமிப்பு தேவை

புதுக்கூரைப்பேட்டை விவசாயி காசிராஜன் கூறியதாவது:-

புதுக்கூரைப் பேட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 170 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்திருந்தேன். படிப்படியாக தண்ணீர் 300 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதனால் அந்த மோட்டாரை தற்போது இயக்க முடியவில்லை. இதனால் புதிதாக ஆழ்துளை மோட்டார் 500 அடியில் அமைத்துள்ளேன். அதில் வரும் தண்ணியும் போதுமான அளவிற்கு விவசாயத்திற்கு கிடைக்கவில்லை. இந்த பகுதியில் மட்டும் 30 ஆழ்துளை கிணறுகள் இதுபோல செயலிழந்து கிடக்கிறது. நிலத்தடி நீர்குறைவுக்கு காரணம், என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீராகும். இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதை தடுக்க மழைநீரை சேமிப்பது உள்ளிட்ட சரியான திட்டம் அவசியம் என்றார்.

செயல்திட்டம் இல்லை

ஆதண்டார்கொல்லை விவசாயி அரங்கநாதன் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 800 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது. கடந்த 2014-15-ல் போடப்பட்ட 2 ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. என்.எல்.சி. சுரங்கம் மூலம் நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப பூமிக்குள் மழைநீரை அனுப்புவதற்கான எந்த செயல்திட்டமும் இப்பகுதியில் இருந்ததகா தெரியவில்லை. இதன் காரணமாக, ஆழ்துளை கிணறுகள் ஒரு வருடத்திற்குள் தண்ணீரின்றி வறண்டு போய்விடுகிறது என்றார்.

மேலும் செய்திகள்