சென்னை
பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
|மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மெட்ரோ மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். கூட்டத்தில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்படவேண்டிய பணிகள் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, சிவ்தாஸ் மீனா பேசியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடிக்கவேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடிக்கவேண்டும். மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றவேண்டும். இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். மழையின் காரணமாக எப்பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2,115.91 கோடி மதிப்பீட்டில் 715.68 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1,481 கோடி மதிப்பீட்டில் 379.66 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியால், மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் புதிதாக மேற்கொள்ளப்படும் ரூ.232 கோடி மதிப்பீட்டிலான கால்வாய் பணிகளை முன்னுரிமை அளித்து முடிக்கவேண்டும்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் இரண்டு கட்டங்களாக 6 ஆயிரத்து 720 இடங்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 979 கி.மீ. நீளம் உள்ள மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை பருவமழை காலத்துக்கு முன்பாக பணிகள் முடிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச்செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.