< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு
மாநில செய்திகள்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு

தினத்தந்தி
|
8 July 2022 12:56 PM IST

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியை தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னயை பொறுத்த வரை 1055 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வருகிறது. இதில் 179.45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். இந்த பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். சென்னையில் ஒரு ஒப்பந்ததாரரே பல இடங்களில் வேலையை எடுத்து நடத்துவதால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.

பதிவு பெற்ற தகுதியான ஒப்பந்ததாரராக இருப்பதால் அவரே பணிகளை எடுத்து கொள்கிறார். அவரிடம் காலதாமதம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். பருவ மழை தொடங்கும் முன்பு பணிகளை முடிக்குமாறு முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். அதற்கேற்ப பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 564 இடங்களில் மழைநீர் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலும் தூர்வாரும் பணி வேகமாக நடந்து வருகிறது.

மழைநீர் தேங்குவதை தடுக்க, திருப்புகழ் கமிட்டி சில பரிந்துரைகளை கூறி உள்ளது. அதை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி கனமான மரத்தின் மரக்கிளைகளை அகற்றி மரத்தின் கனத்தை குறைத்து வருகிறோம். இதுவரை சென்னையில் 514 மரக்கிளைகளை அகற்றி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்