< Back
மாநில செய்திகள்
சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

தினத்தந்தி
|
17 Sept 2023 10:45 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது, 4-ம் மண்டலம் வடக்கு அவென்யூ சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, அம்பேத்கர் நீர்வழிக்கால்வாயை ஆழப்படுத்தி தூர்வாரும் பணி, 5-ம் மண்டலம் தமிழ்ச்சாலை, ராஜாஜி சாலை மற்றும் எழும்பூர் பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, 7, 9, 11, மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றை இம்மாத இறுதிக்குள் முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

6-ம் மண்டலம் பராக்கா சாலை, 8-ம் மண்டலம் பார்த்தசாரதி சாலை, 12-ம் மண்டலம் திருவள்ளுவர் நகர் ஆறுமுகம் தெருவில் மழைநீர் வடிகால் பணி ஆகியவை மந்த நிலையில் நடைபெறுவதால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் அறிவுறுத்தினார். ஸ்டீபன்சன் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளை உடனே முடிக்கவும், அறிவுறுத்தினார்.

10-ம் மண்டலம் அசோக் நகர் 4-வது அவென்யூ சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, புஷ்பவதி அம்மாள் நீர்வழி கால்வாயில் தூர்வாரும் பணி, 13-ம் மண்டலம் தலைமைச் செயலக காலனியில் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாம்பலம் நீர்வழிக்கால்வாயில் ஒட்டியிருக்கும் அம்மா உணவகம், 16-வது நாள் காரியக்கூட கட்டிடத்தை வேறு இடத்தில் மாற்றி, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மாம்பலம் நீர்வழிக்கால்வாயை அகலப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வடிகால் பணிகளையும் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அபாயகரமாக உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம், ஒக்கியம் மடு அருகில் கொட்டப்பட்ட மணல் திட்டை அகற்ற அவர் உத்தரவிட்டார். நீர்வழிக் கால்வாய்களில் குப்பை கொட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கும்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்கும்படி உத்தரவிட்டார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரில், ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 45 நாட்களுக்குள் முடிக்கும்படி தலைமைச் செயலாளர் ஆணையிட்டார்.

இந்த கூட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர், பேரிடர் மேலாண்மை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்