திருவள்ளூர்
திருத்தணி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர்
|திருத்தணி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக உள்ளது.
திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காலங்களில் மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் மாணவிகள் தேங்கி நிற்கும் மழைநீரில் மிதித்தபடி வகுப்பறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் அரசு மகளிர் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மாணவிகள் சேற்றில் வழுக்கி விழும் நிகழ்வுகளும் நடக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி, தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.