< Back
மாநில செய்திகள்
மழைநீரை சேமிக்க கோடை உழவு அவசியம்
நாமக்கல்
மாநில செய்திகள்

மழைநீரை சேமிக்க கோடை உழவு அவசியம்

தினத்தந்தி
|
5 May 2023 12:15 AM IST

மழைநீரை சேமிப்பதில் கோடை உழவு அவசியம் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

கோடை உழவு

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது. கோடை மழையை பயன்படுத்தி, கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது.

இந்த வெப்பம் கீழ்பகுதிக்கு செல்லும்போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். மேல் மண்ணை உழவு செய்து புழுதிப்படலம் அமைத்து விட்டால் விண்வெளிக்கும், வேர் சூழ்மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் புழுதிப்படலம் தடுத்து விடும். கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி, நிலத்தை நன்கு உழவு செய்வதால், மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால், நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.

பூச்சிகள் அழிப்பு

வயலில் உள்ள கோரை போன்ற களைகள், மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில் நுட்பமாகும். நிலத்தின் அடியில் உள்ள கூண்டு புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழு கட்டுப்படுத்தப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதல் பெருமளவு குறையும். வயல் வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில், கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கோடை உழவு செய்த பின் விதைப்புக்கு தேவையான விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்