< Back
மாநில செய்திகள்
திறந்தவெளிக் கிடங்குகளால் மழையில் நனைந்து வீணாகும் நெல்: உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

திறந்தவெளிக் கிடங்குகளால் மழையில் நனைந்து வீணாகும் நெல்: உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
8 Feb 2023 2:21 PM IST

திறந்தவெளியில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல், மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் திறந்தவெளியில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல், மழையில் நனைந்து வீணாவதைத் தடுத்து, நெல்மணிகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பலமுறை தமிழக அரசைக் கேட்டுள்ளது.

அண்மையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் கொண்டுவந்து வைத்திருந்த நிலையில், திடீரெனப் பெய்த மழையால் நெல்மணிகளும் நனைந்து வீணாவதைப் பார்த்து வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதேபோல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவம் தவறிப் பெய்து வரும் மழையால், பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லைப் பாதுகாக்க, போதுமான அளவுக்கு நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிக அளவு நெல் விளைந்துள்ளதாக தமிழக அரசே தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்வதுடன், அவற்றை முறையாகப் பாதுகாப்பதும் அவசியமாகும்.

அதேபோல, அண்மையில் பெய்த திடீர் மழையால் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்று வேளாண் பெருமக்களும், விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளன. இதையும் கருத்தில் கொண்டு, தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்