கன்னியாகுமரி
குமரியில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 80.6 மி.மீ. பதிவு
|குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 80.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 80.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பரவலாக மழை
தமிழகத்தில் கோடைமழை அதிகமாக பெய்யும் இடம் குமரி மாவட்டம். ஆனால் இந்த வருடம் மற்ற மாவட்டங்களில் கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. ஆனால் குமரியில் கோடைமழை குறைந்த அளவு பெய்து ஏமாற்றி விட்டது.
அதே சமயத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நாகா்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சுமார் 30 நிமிடங்களுக்கு பலத்த மழை பெய்தது. இதே போல மலையோர பகுதி மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 80.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-10.4, கன்னிமார்-9.3, கொட்டாரம்-17.4, நாகர்கோவில்-17.2, புத்தன்அணை-54.6, தக்கலை-3, பாலமோர்-36.2, அடையாமடை-3, குருந்தன்கோடு-7, ஆனைகிடங்கு-23.2 என்ற அளவில் மழை பெய்துள்ளது.
இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-4.8, பெருஞ்சாணி-58.4, சிற்றார் 1-2, மாம்பழத்துறையாறு-26.6, முக்கடல்-20.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணை நிலவரம்
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 174 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 437 கனஅடி தண்ணீரும் வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து குடிநீருக்காக முக்கடல் அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.07 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 39.45 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 8.53 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.63 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 13.40 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 19.40 அடியாகவும் உள்ளது.
--------------