கன்னியாகுமரி
குமரியில் சாரல் மழை
|குமரியில் சாரல் மழை பெய்தது. முள்ளங்கினாவிளை பகுதியில் 12.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் சாரல் மழை பெய்தது. முள்ளங்கினாவிளை பகுதியில் 12.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
சாரல் மழை
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திடீரென வானில் கார்மேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பெய்ய தொடங்கிய சாரல் மழை, நேற்று காலை வரை நீடித்தது. அதேசமயம் கடலோர கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. அழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஏராளமான வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மழையுடன் சோ்ந்து பல இடங்களில் சூறைக்காற்றும் வீசி வருவதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து இருந்ததை காணமுடிந்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை சாரல் மழை பெய்தது.
திற்பரப்பு அருவியில்...
மலையோரம் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திற்பரப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது. அருவியிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிப்பதற்கு எராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பூதப்பாண்டி- 1.3, களியல்- 2.8, குழித்துறை- 11.2, பெருஞ்சாணி அணை- 2.2, பேச்சிப்பாறை- 3, புத்தன் அணை- 1.8, தக்கலை- 2.1, மாம்பழத்துறையாறு அணை- 2, திற்பரப்பு- 2.8, கோழிப்போர்விளை- 8, ஆனைக்கிடங்கு- 2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளில் நீர்வரத்து
அதே சமயம் அணைகளுக்கு தண்ணீர் சீராக வருகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 13.19 அடியாக இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 131 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 39.98 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 631 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 189 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 210 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது. முக்கடல்அணையின் நீர்மட்டம் 6.80 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 1.9 கனஅடி நீரும் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.