< Back
மாநில செய்திகள்
சென்னையில் ஆலங்கட்டி மழை; மின்னல் தாக்கி 2 பேர் பலி
மாநில செய்திகள்

சென்னையில் ஆலங்கட்டி மழை; மின்னல் தாக்கி 2 பேர் பலி

தினத்தந்தி
|
23 April 2023 1:58 AM IST

சென்னை ஆவடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. பொன்னேரி மற்றும் காஞ்சீபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பலத்த காற்றுடன் மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்ெடரித்தது. இந்தநிலையில் நேற்று மதியம் பல்வேறு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பாக்கம், நெமிலிச்சேரி, திருமுல்லைவாயல், அயப்பாக்கம், கோவில்பதாகை, பருத்திப்பட்டு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சி.டி.எச் சாலை, ஆவடி-பூந்தமல்லி சாலை, புதிய ராணுவ சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருநின்றவூர், பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

ஆலங்கட்டி மழை

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆவடி ஓ.சி.எப், பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. மழையுடன் சேர்த்து ஐஸ் கட்டிகள் போன்று தரையில் விழுந்ததால் பொதுமக்கள் சாலையில் விழுந்து கிடந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து வைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சிறுவர்கள் சாலையில் கிடந்த ஆலங்கட்டிகளை மழையில் நனைந்தவாறு கையில் எடுத்து விளையாடினர். பலத்த காற்று வீசியதால் பட்டாபிராம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இருந்த விளம்பர பேனர் கிழிந்து தொங்கியது. மழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

மின்னல் தாக்கி பலி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி. இவருக்கு சரிதா (37) என்ற மனைவியும், மஞ்சு என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

பெரும்பேடு கிராமத்தில் உள்ள முத்துக்குமாரசாமி கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சரவணனின் மாமனார் வேம்புலி (60), உறவினர் ஆதிலட்சுமி (35) ஆகியோர் இவர்களது வீட்டுக்கு வந்தனர்.

நேற்று மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் நிலத்தில் காய வைத்திருந்த பச்சை பயிறு செடிகளை பாதுகாப்பான இடத்தில் மூடி வைக்க சரவணன், வேம்புலி, ஆதிலட்சுமி 3 பேரும் விவசாய நிலத்துக்கு சென்றனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் சரவணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். வேம்புலி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆதிலட்சுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ெபண் சாவு

இதேபோல் காஞ்சீபுரம் திருகாளிமேடு, வீரசிவாஜி தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசித்து வருபவர் மோகன். இவருடைய மனைவி இளவரசி (32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மோகன் கோணிப்பை வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலை காஞ்சீபுரம் நகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இளவரசி வீட்டின் மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் இளவரசி சுருண்டு விழுந்து பலியானார்.

தென்னை மரம் தீப்பிடித்தது

மாங்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மாங்காடு, லட்சுமிபுரம் சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள 2 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. 2 தென்னை மரங்களின் உச்சியிலும் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள் பலத்த மழைகொட்டியதால் தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீ தானாக அணைந்துவிட்டது. சென்னையை அடுத்த பல்லாவரம், அனாகாபுத்தூர் உள்பட புறநகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்