மழை வெள்ள பாதிப்பு: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு
|மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றி தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி காட்டப்படுகிறது.
சென்னை,
'மிக்ஜம்' புயல் தமிழக வடமாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
கனமழையால் பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்யவுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் பிற்பகல் 1.20 மணியில் இருந்து 1.30 மணி வரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு, மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ படக்காட்சி காட்டப்படுகிறது.