< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

அந்தியூர், நம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

தினத்தந்தி
|
19 March 2023 9:28 PM GMT

அந்தியூர், நம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் நாசமாயின.

அந்தியூர், நம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் நாசமாயின.

வாழைகள் சாய்ந்தன

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இரவு நேரங்களில் மழை பெய்கிறது. அதேபோல் நேற்று முன்தினம் அந்தியூர் பகுதியில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலை 4 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது. 6 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இரவு 7 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது.

அதன்பின்னர் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 8.30 மணி வரை சுமார் அரை மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புதுக்காடு, கிழங்கு குழி, வட்டக்காடு காந்திநகர், விளாங்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்திருந்த மொந்தன், ரொபஸ்டா ரகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் அடியுடன் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

விவசாயிகள் கவலை

மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் தோட்டங்களில் மூங்கில் கம்புகள் மீது படரவிடப்பட்டிருந்த 5 ஏக்கர் பரப்பளவிலான வெற்றிலை கொடிகளும் கீழே விழுந்து நாசமானது.

வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. மேலும் தென்னை மரம் முறிந்து விழுந்தது. புதுக்காடுவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அந்த பகுதி இருளில் மூழ்கியது.

நம்பியூர்

இதேபோல் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுப்பாளையம், குருமந்தூர், காரப்பாடி, ஒட்டர் கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ' பூவன், தேன் வாழை, செவ்வாழை, நேந்திரம் உள்ளிட்ட வாழைகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளோம். இன்னும் 2 மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்துவிட்டன.. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உடனே அரசு எங்களுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

கொடுமுடி-சோலார்

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை திடீரென கன மழை பெய்தது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு அருகே உள்ள சோலார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11.20 மணி முதல் 11.40 மணி வரை சுமார் 20 நிமிடங்கள் மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

கோபியில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது கோபி அருகே உள்ள எல்லமடையைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதனால் மரத்தின் மேல் பகுதி தீப்பிடித்து எரிந்து கருகியது.

ஊஞ்சலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மழை தூறியது. அதன்பின்னர் நேற்று அதிகாலை 2 மணி முதல் 2.30 மணி வரை மிதமான மழை பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்