< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; 500 வாழைகள் முறிந்து விழுந்தன

தினத்தந்தி
|
17 March 2023 8:44 PM GMT

தாளவாடி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன.

தாளவாடி

தாளவாடி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன.

சூறாவளிக்காற்றுடன் மழை

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது. நேற்று மதியம் 1 மணி வரை வெயில் கடுமையாக அடித்தது.

மதியம் 2 மணி அளவில் கருமேகங்கள் வானில் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 20 நிமிடம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. தாளவாடி, ஓசூர், தொட்டகாஜனூர், திகனாரை , சிக்கள்ளி, இக்கலூர், கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம் ஆகிய பகுதிகளிலும் மழை நிற்காமல் பெய்தது.

சுற்றுச்சுவர் சேதம்

மழை பெய்தபோது வீசிய சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தாளவாடி தபால் அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது. இதேபோல் தாளவாடி போலீஸ் நிலையத்தில் இருந்த 3 தைல மரங்கள் வேறுடன் சாய்ந்தன. மரம் விழுந்ததில் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் அண்ணாநகர் அருகே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். எனினும் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாழைகள் நாசம்

தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டு இருந்த சிமெண்டு ஓடு சூறாவளிக்காற்றால் தூக்கி வீசப்பட்டு உடைந்தது. நல்ல வேளையாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் நடைபெறவில்லை. மேலும் அலுவலகத்தின் வளாகத்தில் இருந்த 3 மரங்கள் முறிந்து விழுந்தன. ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த பசுவண்ணா என்பவரின் வீட்டின் அருகில் இருந்த மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேபோல் ஓசூரில் ரகு (55) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன. சேதமடைந்த வாழைக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் லேசான மழை தூறியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கொடிவேரி-35, கோபி -32.20, கவுந்தப்பாடி -11.6, பவானிசாகர்-7.80, எலந்தகுட்டை மேடு-1.80.

Related Tags :
மேலும் செய்திகள்