< Back
மாநில செய்திகள்
ஈரோடு நாடார் மேட்டில் வீடுகளில் விடிய, விடிய தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் கடும் அவதி
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு நாடார் மேட்டில் வீடுகளில் விடிய, விடிய தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் கடும் அவதி

தினத்தந்தி
|
22 Oct 2022 10:18 PM GMT

ஈரோடு நாடார் மேட்டில் வீடுகளில் விடிய, விடிய மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.


ஈரோடு நாடார் மேட்டில் வீடுகளில் விடிய, விடிய மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.

கொட்டி தீர்த்த மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஈரோடு மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து கடும் அவதி அடைந்தார்கள்.

ஈரோடு நாடார்மேடு காமராஜர் வீதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாக்கடையில் உள்ள கழிவுநீருடன், மழைநீரும் கலந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டார்கள். வீடுகளில் தண்ணீரில் தேங்கியதால் பொதுமக்கள் விடிய, விடிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அதிகமான அளவு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களால் வெளியேற்ற முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை வரை தண்ணீர் தேங்கி நின்றது. அதன்பிறகு மெதுவாக தண்ணீர் வடிய தொடங்கியது.

சாக்கடை கால்வாய்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் மழை பெய்தாலே அடிக்கடி தண்ணீர் தேங்கி விடுகிறது. பாரதிநகர், டெலிபோன் நகர், மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மழைநீர் தாழ்வாக இருப்பதால் எங்களது பகுதிக்குதான் வந்து சேருகிறது. எனவே காமராஜர் வீதியில் எப்போதுமே மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் நிலைதான் இருக்கிறது.

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதிலுள்ள நீரேற்று பகுதியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிந்தது. அதன்காரணமாக பூந்துறைரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த மழைநீரும் வடிந்து எங்களது பகுதிக்கு வருவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. நள்ளிரவில் வந்த திடீர் வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் சிரமப்பட்டார்கள். குறிப்பாக கைக்குழந்தை வைத்திருப்பவர்களும், வயதானவர்களும் வீடுகளில் உட்காரக்கூட இடமில்லாமல் தவித்தார்கள். எனவே மழைநீர் எங்களது பகுதியில் தேங்காத வகையில் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் எங்களது பகுதிக்கு வருவதால் சாக்கடை கால்வாயை அகலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்