< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

சோலார், மொடக்குறிச்சி பகுதியில் பலத்த மழை: ரெயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு- 46 புதூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

தினத்தந்தி
|
22 Oct 2022 12:10 AM GMT

சோலார், மொடக்குறிச்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 46 புதூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.


சோலார், மொடக்குறிச்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 46 புதூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

நுழைவு பாலத்தில் தண்ணீர்

ஈரோடு அடுத்துள்ள சோலார், மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. விடிய விடிய மழை நிற்காமல் பெய்ததால், ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 46 புதூர், ஆனைக்கல்பாளையம், சோலார், வெண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம், குட்டைகள் போல் காட்சி அளித்தது.

வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் வாய்க்கால் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஈரோடு- பழைய கரூர் சாலையில் சோலார் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் வெண்டிபாளையத்தில் இருந்து அக்கரையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஊர்களுக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக அங்கிருந்து ஈரோட்டுக்கு ஜவுளி வாங்க வரும் பொதுமக்கள் சிரமப்பட்டார்கள்.

மொபட்டுகள் நின்றன

ரெயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ஈரோட்டுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்றார்கள். இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் மாற்றுப்பாதையில் சென்றார்கள். 46 புதூர் பகுதியில் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு தூங்க முடியாமல் வீடுகளில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அடுத்து ஆரியங்காடு என்ற இடத்தில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்திலும் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் இந்த பாலம் உள்ளது. ஆயிரக்கணக்கான பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் இந்த பாலத்தை கடந்து செல்லும். பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பஸ், லாரி, கார் உள்ளிட்டவை கடந்துவிட்டன. ஆனால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கடக்க முடியாமல் மாற்று வழியில் சென்றார்கள். அதையும் மீறி மொபட்டுகளில் வந்த சிலர் தண்ணீரை கடந்து செல்லும்போது வாகனங்கள் நின்றுவிட்டன. இதனால் தண்ணீரில் இறங்கி மொபட்டை தள்ளிக்கொண்டு அவர்கள் சென்றதை காண முடிந்தது.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை சோளிபாளையம் கிராமம் மீனா நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல் ஈரோட்டில் இருந்து அறச்சலூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள சோளிபாளையம் பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதேபோல் அவல்பூந்துறையில் இருந்து மொடக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் மழை நீர் கரும்பு காட்டுக்குள் புகுந்தது. குரங்கன் ஓடை என்ற அனுமன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் பெரும்பாலான பாலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கோவில்பாளையத்தில் இருந்து சிவகிரி செல்லும் பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாமல் சிரமப்பட்டனர்.

மயானம் மூழ்கியது

இதேபோல் சாவடிப்பாளையத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள மயானத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் ஒரு பெரிய கொப்பு வாய்க்கால் உள்ளது. மொடக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் அந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் மயானம் இருப்பதே தெரியாத அளவுக்கு அந்த இடம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் மயானம் அமைந்துள்ள இடம் ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருப்பதால் அங்கிருந்து தண்ணீர் ரோட்டுக்கு வழிந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ரோட்டில் இறங்கி தண்ணீரில் வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

சாவடிப்பாளையத்தில் இருந்து மொடக்குறிச்சி செல்லும் மற்றொரு நுழைவு பாலத்திலும் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சுவர் விழுந்தது

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்தியூர் அருகே உள்ள அண்ணமார்பாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி (வயது 36). அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலுமணி அவருடைய மனைவி நித்யா. இவர்களின் 2 குழந்தைகளுடன்

வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் நனைந்திருந்த வீட்டின் ஒரு பகுதி சுவர் இரவு 11 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. சத்தம்கேட்டு வேலுமணி, நித்யா திடுக்கிட்டு எழுந்தார்கள். பின்னர் 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.

உயிர் தப்பினார்கள்

வீட்டில் இருந்த 4 பேரும் தூங்கிக்கொண்டு இருந்த இடத்துக்கு வெளிப்புறமாக சுவர் விழுந்தது. இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.

இதுகுறித்து சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு நேற்று காலை தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஊராட்சி செயலாளர் கேசவன் (பொறுப்பு), சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி தலைவர் சுமதி தவசியப்பன் ஆகியோர் சென்று சுவர் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டார்கள்.

சிவகிரி

சிவகிரி, அஞ்சூர், கந்தசாமிபாளையம், விளக்கேத்தி, வேட்டுவபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நீரோடைகள் நிரம்பி வழிகின்றன மேலும் சிவகிரி பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி விட்டன. அதேபோல் கசிவு நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிவகிரி மற்றும் சுற்றுப்பகுதியில் கொட்டிய மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மரவள்ளிக்கிழங்கு, வாழை, மஞ்சள் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

பெருந்துறை

பெருந்துறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் பெருந்துறை சுற்றுவட்டார பகுதியிலும் இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இந்தநிலையில் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் தங்கமுத்து என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதனால் மரம் தீப்பிடித்து எரிந்தது. இதேபோல் பணிக்கம்பாளையத்திலிருந்து பெருந்துறைக்கு வரும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் தாழ்வான ஒரு இடத்தில் திடீரென குட்டைபோல் தண்ணீர் தேங்கியிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் கொப்பளித்து வெளியே வந்ததாகவும், அதனால் அங்கு நீர் இடி விழுந்து இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் சிலர் மழை தண்ணீர்தான் இங்கு தேங்கியுள்ளது நீர் இடி எதுவும் விழவில்லை என்றார்கள். ஆனாலும் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபடி இருந்தார்கள்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர், நடுப்பாளையம், கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, கருக்கம்பாளையம், கொளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.15 மணி முதல் 4.45 மணி வரை பலத்த மழை பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்