< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய மழை: 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; சாலைகள் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு- ஓடைகளில் காட்டாறுபோல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது

தினத்தந்தி
|
21 Oct 2022 11:13 PM GMT

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய மழையால் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ஈரோட்டில் வெளுத்து வாங்கிய மழையால் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை நல்ல முறையில் பெய்து வருகிறது. மாதம்தோறும் ஒரு மழையாவது பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக இரவு அல்லது மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் அந்தியூர் வட்டாரத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பியதுடன், பர்கூர் மலைப்பாதையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் லேசான தூறலாக மழை தொடங்கியது. அது 11 மணி அளவில் வலுத்து பெய்யத்தொடங்கியது. நள்ளிரவை கடந்தும் மழை சிறிதும் விடாமல் கொட்டியது. ஈரோடு மாநகரில் ஒட்டு மொத்தமாக அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவிலேயே அனைத்து பகுதிகளிலும் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் தேங்க தொடங்கியது. ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோட்டின் புறநகர் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின. பலத்த இடி-மின்னலுடன் பெய்த மழை நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து அதிகாலை 3.30 மணி அளவில் நின்றது.

காட்டாறாக மாறிய ஓடைகள்

இந்த பெரு மழையில் மழை வெள்ளம் ஓடைகளில் காட்டாறாக பாய்ந்தது. வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வடிந்த வெள்ளம் பெரும்பள்ளம் ஓடையில் கலந்ததால் ஓடையில் வெள்ளம் 2 கரைகளையும் தொட்டுச்சென்றது. முத்தம்பாளையம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அதே ஓடையில் சேர்ந்தது. இதனால் கரைகளை கடந்த வெள்ளம் பிரவாகமெடுத்துச்சென்றது.

இதனால் ஈரோடு சேனாபதி பாளையம் அண்ணாநகர், சத்யா நகர் பகுதிகளில் சுமார் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நள்ளிரவில் பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.

மூதாட்டி சாவு

இதுபோல் ஸ்டோனிபாலம் அசோகபுரி பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு 12 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டில் பெரியசாமி என்பவருடைய மனைவி ரங்கம்மாள் (வயது 75) என்பவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்தார். மாற்றுத்திறனாளியான அவர் வீட்டுக்குள் இருந்தநிலையில் ஓடையில் பெருகிய வெள்ளம் வீட்டுக்குள் சென்றது. ஏற்கனவே உடல் குன்றி இருந்த அவரால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

அதே நேரம் அக்கம்பக்கத்து வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். பின்னர் ரங்கம்மாள் வீட்டுக்குள் படுத்து இருப்பதை அறிந்து, சிலர் விரைந்து வந்து அவரை மீட்டனர். சற்று தொலைவில் உள்ள மகளின் வீட்டுக்கு அவரை எடுத்துச்செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவரது சாவு இயற்கை மரணம் என்று உறுதி செய்ததாக தெரிவித்தனர்.

மரப்பாலம்

பெரும்பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளம் மரப்பாலம் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. சுமார் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அனைத்து வீடுகளிலும் இருந்த அனைவரும் பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஆனால், நள்ளிரவில் மழை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பெரும்பள்ளம் ஓடை (பெரியார் நகர் அருகே) தூய்மை பணியில் இருந்த ஒரு பொக்லைன் எந்திரம் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.

மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நேற்றுக்காலை வெள்ளம் தேங்கியது. ஓடைகளை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு காட்டாறுகள் போல அவை ஓடிக்கொண்டு இருந்தன.

சாலை உடைப்பு

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, ரங்கன்பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடை, சுண்ணாம்பு ஓடை என்று அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நல்லியம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டிய பாலத்தை ஒட்டி சாலையில் உடைப்பு ஏற்பட்டது. முத்தம்பாளையம் திட்டம் 8 பகுதியில் பெய்த பெரு மழையால் ஓடிய வெள்ளம் பிரவாகமெடுத்து ஓடியதால் அங்குள்ள தனியார் தோட்டத்துக்கு மதில் சுவர் இடிந்து விழுந்தது.

ரங்கம்பாளையம் ரெயில் நகர் அருகே ரெயில்வே பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரங்கம்பாளையம் ஓடையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்றது. அருகில் உள்ள முத்தம்பாளையம் திட்டம் 7 பகுதிக்கு செல்லும் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடிந்தது.

சென்னிமலை ரோடு கலைஞர் கருணாநிதி நகர் ரெயில்வே பாலத்தின் அடியில் வெள்ளம் சுமார் 2 அடிக்கும் மேல் பொங்கி ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கார்கள் சிக்கிக்கொண்டன. பள்ளிக்கூட வாகனம் ஒன்றும் தண்ணீரில் சிக்கியது. இதனால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர்.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

அதன்பின்னர் பஸ் கயிறு கட்டி இழுக்கப்பட்டு மீட்கப்பட்டது. தொடர்ந்து 2 சக்கர வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. ஈரோட்டில் இருந்து சென்னிமலை ரோட்டில் சென்ற வாகனங்கள் கலைஞர் கருணாநிதி நகர் வழியாக ரெயில் நகர் செல்லும் வழியில் சென்றன. ஆனால், அங்கும் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்று, போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் திரும்பவும் அதே வழியில் சென்று சிரமப்பட்டனர்.

சூரம்பட்டி அணைக்கட்டில் நீர் வீழ்ச்சி தெரியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாஸ்திரி நகர் பகுதியில் பெய்த மழை வெள்ளமும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் கலந்ததால் வாய்க்கால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து வீடுகளை சூழ்ந்தது. சாஸ்திரிநகரை ஒட்டி உள்ள நாடார் மேடு விநாயகர் கோவில் வீதியில் தாழ்வான குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் எதிரில் தண்ணீர் குளம்போல தேங்கியது. வெள்ளம் செல்ல இடம் இல்லாததால், அந்த பகுதி முற்றிலும் வெள்ளம் தேங்கியது.

200 வீடுகள்

ரங்கம்பாளையம் பதிவாளர் அலுவலகம் அருகே ரங்கம்பாளையம் ஓடை வெள்ளம் செடிகள், மரங்கள் அடைப்பால் வீடுகளை சூழ்ந்தது. பெரியசடையம்பாளையம் பகுதியிலும் வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.

ஈரோடு மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை மொத்தம் சுமார் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

தொட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டிப்பாளையம் பகுதியில் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் சாலையில் பாய்ந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது.

போலீஸ் நிலையம்

நேற்று காலை முதல் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் தலைமையில் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர். இதுபோல் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தலைமையில் செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் பார்வையிட்டனர். ரங்கம்பாளையம் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் ஓடையில் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி முன்பகுதியில் உள்ள ஓடை முழுமையாக தண்ணீர் நிரம்பி ஆறுபோல ஓடியது. தாலுகா போலீஸ் நிலையம், சிறப்பு உளவுப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி. அலுவலகங்களின் தரைதளமான வாகன நிறுத்தும் பகுதி முழுமையாக தண்ணீரால் நிரம்பியது.

இதேபோல் ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்ைத வெள்ளம் சூழ்ந்தது. முத்தம்பாளையம் குளமும் நிரம்பி வழிந்தது.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்றுக்காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-

நம்பியூர்-64

எலந்தைகுட்டை மேடு-64

கொடுமுடி-62

சத்தியமங்கலம்-58

பெருந்துறை-51

கொடிவேரி-45

சென்னிமலை-42

கவுந்தப்பாடி-39.20

வரட்டுப்பள்ளம்-36.60

ஈரோடு-33

தாளவாடி-30

கோபி-29

மொடக்குறிச்சி-26

அம்மாபேட்டை-17.80

குண்டேரிபள்ளம்-15.80

பவானி-15.60

பவானிசாகர்-7.60

இவ்வாறு மழை அளவு பதிவாகி இருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்