< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விடிய விடிய நிற்காமல் பெய்த மழை; பல்வேறு இடங்களில் சாலையில் தேங்கிய தண்ணீர்

தினத்தந்தி
|
11 Oct 2022 9:32 PM GMT

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விடிய விடிய நிற்காமல் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விடிய விடிய நிற்காமல் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

2-வது நாளாக கொட்டிய மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அனைத்து இடங்களிலும் விடிய விடிய மழை பெய்தது. இதேபோல் நேற்று இரவும் 2-வது நாளாக விடிய விடிய மழை கொட்டியது. காலை விடிந்தும் மழை நிற்கவில்லை. 8 மணி வரை சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் காலையில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்கள் மழை கோட்டு அணிந்தபடி சென்றார்கள். நடந்து செல்பவர்கள் குடை பிடித்தபடி சென்றார்கள்.

மாணவ-மாணவிகளை பெற்றோர் பத்திரமாக மழையில் நனையாமல் பள்ளிக்கு அழைத்து வந்தார்கள். சாலையோரம் அன்றாடம் கடைவிரித்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இந்த தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய விடாமல் கொட்டிய மழையால் கோபி காசிபாளையத்தில் ஈரோடு சத்தி மெயின் ரோட்டில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கியது.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் ஒரு புறம் மட்டும் சென்று வந்தன. நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணியாளர்களுடன் விரைந்து சென்று அடைப்பை நீக்கி தண்ணீரை வடிய வைத்தனர். அதன்பின்னர் அந்த ரோட்டில் போக்குவரத்து சீரானது.

பள்ளியில் தண்ணீர்

கோபி அடுத்துள்ள மொடச்சூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மழை தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கோபி சாமிநாதபுரம் செல்லும் வழியில் கீரிப்பள்ள ஓடையில் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த இரு இடங்களையும் கோபி நகராட்சி தலைவர் என்.ஆர். நாகராஜ், ஆணையாளர் பிரேம்ஆனந் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தனர்.

மரம் விழுந்தது

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக கோபி- திருப்பூர் சாலையில் உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவருடைய டீக்கடையின் மீது, சாலையோரம் இருந்த சுமார் 20 ஆண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரம் விழும் சத்தம் கேட்டு உஷாராக கடைக்குள் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து உயிர் தப்பினார்கள். இதுபற்றி உடனே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை நேற்று அதிகாலை 4 மணி வரை நிற்காமல் பெய்தது. இதனால் குரங்கன் ஓடை மற்றும் குட்டமடை ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டார்கள்.

இதேபோல் கணபதிபாளையம் நால்ரோடு அருகே சின்னம்மாபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தில் வாய்க்கால்போல் தண்ணீர் ஓடியது. முட்டளவுக்கு மேல் தண்ணீர் வேகமாக சென்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் செல்ல முடியவில்லை. பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சென்றன.

ஏரிகளில் தண்ணீர்

அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்தியூர் எண்ணமங்கலம் ஏரியின் முழுகொள்ளளவு 11.75 அடியாகும். இதில் தற்போது 11 அடி நீர்மட்டம் உள்ளது. இதேபோல் 17.5 அடி கொள்ளளவு கொண்ட கெட்டிச்சமுத்திரம் ஏாியில் 16 அடிக்கு தண்ணீர் உள்ளது. அந்தியூர் பெரிய ஏரியிலும் 15.75 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. சத்தியபாளையம் ஏரியின் முழு கொள்ளளவு 12 அடியாகும். தற்போது 11.5 அடியாக நீர்மட்டம் உள்ளது.

13 அடி கொள்ளளவு கொண்ட வேம்பத்தி ஏரியில் 9 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. ஆப்பக்கூடல் ஏரியும் அதன் முழு கொள்ளவை எட்டி உள்ளது. அதிலிருந்து உபரி நீர் வெளியேறுகிறது.

தொடர் மழையால் அந்தியூர் வரட்டு பள்ளம் அணை நிரம்பியுள்ளது. இந்த அணையில் நீர்மட்ட உயரம் 33.46 அடி. முழு கொள்ளளவும் நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் உபநீராக வெளியேறுகிறது.

அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் தண்ணீரின் அளவு தெரியாமல் மீன்பிடிக்க பலர் இறங்கி ஆபத்தை சந்திக்கிறார்கள். அதனால் ஏரிகளின் முன்பு எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொடுமுடி, ஊஞ்சலூர், சத்தியமங்கலம், பவானி, பவானிசாகர் என அனைத்து இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது.

Related Tags :
மேலும் செய்திகள்