< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிதீர்த்த மழை; விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது

தினத்தந்தி
|
10 Oct 2022 8:30 PM GMT

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய நிற்காமல் மழை பெய்ததால் விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது.


ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய நிற்காமல் மழை பெய்ததால் விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது.

குளிர்ச்சி நிலவியது

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்கு மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நிற்காமல் சீராக மழை பெய்துகொண்டே இருந்தது. அதிகாலை 5 மணி அளவிலேயே மழை நின்றது. இதனால் மாவட்டம் முழுவதும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளுகுளு சுற்றுலா தலங்களில் இருப்பதுபோல் குளிர்ச்சியாக இருந்தது.

பலத்த மழை

ஈரோடு மாநகரம், கொடுமுடி, ஊஞ்சலூர், சென்னிமலை, கோபி, தாளவாடி, பவானி, டி.என்.பாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், அம்மாபேட்டை என அனைத்து இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழை பெய்தாலும் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் ஓடியது. ரோட்டில் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

தோட்டங்களில் தண்ணீர்

கோபியை அடுத்துள்ள புதுக்கரைபுதூரில் அந்தியூர் - கோபி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கூகலூர் கிளை வாய்க்கால் பாலம் முற்றிலும் மண்ணைக்கொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கோபி கீரிப்பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாய்க்காலில் தேங்கியிருந்த தண்ணீர் செல்ல வழியில்லாமல் அருகே இருந்த வாழை, கரும்பு பயிரிட்டு இருந்த தோட்டங்களுக்குள் புகுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து, மண்ணை வைத்து அடைக்கப்பட்டிருந்த பாலத்தை திறந்துவிட்டனர்.

இதேபோல் தொடர் மழை காரணமாக கோபி அருகே உள்ள கொடிவேரி அணையிலும் நேற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு 33.46 அடியாகும். நேற்று முன்தினம் இரவு தாமரகரை, தாளக்கரை. கொங்காடை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கும்பரவாணி பள்ளம், கல்லு பள்ளம், வரட்டுப்பள்ளம் வழியாக அணைக்கு வினாடிக்கு 353 கன அடி தண்ணீர் வந்தது.

தொடர்ந்து 2 நாட்கள் இதேபோல் தண்ணீர் வந்தால் அணை நிரம்பி விடும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

சரிந்து விழுந்த சாக்கடை சுவர்

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சியில் ரூ.6¾ லட்சம் மதிப்பில் 200 மீட்டர் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாக்கடை கால்வாய் சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சாக்கடை கால்வாய் பணி தரமற்றதாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். உடனே தரமாக கட்டவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்கள்.

தேங்கிய தண்ணீர்

சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதன்பின்னர் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சிவகிரி, கந்தசாமி பாளையம், வேட்டுவளையம், விளக்கேத்தி போன்ற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. நடவுப்பணிகள் மேற்கொண்டுள்ள நெல் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை நேற்று காலை விவசாயிகள் வெளியேற்றும் பணிகளை காணமுடிந்தது.

மரம் விழுந்தது

டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது, அத்தாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், வாணிப்புத்தூர், டி.ஜி.புதூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை மழை கொட்டியது. இந்தநிலையில் டி.என்.பாளையத்தில் அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் அதிகாலை 3 மணியளவில் திடீரென விழுந்தது.

இதுபற்றி தகவலறிந்த பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு போலீசாருடன் சென்று மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினர். எனினும் அந்த ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டாற்று வெள்ளம்

கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாக்கம்பாளையம் செல்லும் வழியில் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் என 2 பள்ளங்கள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை முதல் கடம்பூர் மலைப்பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

குரங்கன் ஓடை

ஊஞ்சலூர் அருகே உள்ள கொம்பனைப்புதூரில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கின்றது. வாய்க்காலின் மேல் பகுதியில் குரங்கன் ஓடை செல்கின்றது. இந்த இடத்தை சைபன் பாலம் என்று அழைப்பார்கள்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் குரங்கன் ஓடையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது. இதன் காரணமாக குரங்கன் ஒடையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றது. இந்த ஓடையானது வெள்ளோட்டில் இருந்து பூந்துறை, மொடக்குறிச்சி வழியாக வருகின்றது. இறுதியில் ஓடை நீரானது ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூரில் காவிரி ஆற்றில் கலக்கின்றது.

கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. கவுந்தப்பாடி பகுதியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Related Tags :
மேலும் செய்திகள்