தண்டவாள சீரமைப்பு பணி: தென் மாவட்டங்களில் 11 ரெயில்கள் ரத்து..!!
|சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களில் 11 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கனமழை காரணமாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 7.25, 10.10, மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரெயில், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 7.35 மணிக்கு புறப்படும் ரெயில், தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு மாலை 6.25 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை (21-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 7.20, 8.15, மாலை 4.25, 6.15 மணிக்கு புறப்படும் ரெயில், வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 11.05 மணிக்கு புறப்படும் ரெயில், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகியவை நாளை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, தூத்துக்குடியில் இருந்து நாளை சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.