< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்ரூ.50 கோடியில் புதிய ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கைமத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்ரூ.50 கோடியில் புதிய ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கைமத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்

தினத்தந்தி
|
19 April 2023 7:00 PM GMT

நாமக்கல்லில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அருகில் நவீன ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

புதிய கொடிக்கம்பம்

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் முன்புறம் நாமக்கல் நகர பா.ஜனதா சார்பில் 46 அடி உயரத்தில் புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொடிக்கம்ப கொடியேற்று விழா கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட பார்வையாளர் சிவகாமி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை மந்திரி டாக்டர் எல்.முருகன் புதிய கொடிக்கம்பத்தில் பா.ஜனதா கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக பா.ஜனதா விளங்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை ஆட்சி செய்த பிரதமர்களை விட தற்போதைய பிரதமர் மோடி தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீது மிகவும் பற்று கொண்டு உள்ளார். அவர் செல்லும் இடம் எல்லாம் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றி வருகிறார்.

நவீன ரெயில்நிலையம்

டெல்லியில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி தமிழர்களுடன் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். கடந்த 8 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் பிரதமரின் நலத்திட்ட உதவி சென்றடைந்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் அகில இந்திய அளவில் 2-வது மாநிலமாக தமிழகத்தில் அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய சார்பு பாரத திட்டத்தின் கீழ் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இறால் மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 வழித்தடங்களில் புதிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாமக்கல்லில் இப்போது உள்ள ரெயில் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக நாமக்கல்லில் அமைய உள்ள புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.50 கோடி மதிப்பில் நவீன ரெயில் நிலையம் கட்டுவதற்கு ரெயில்வே மந்திரியிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளோம்.

ராசிபுரம் மற்றும் நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 2 ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

மானியத்தொகை ரூ.7 கோடி

சேலம் ஆவின் இரண்டாக பிரிக்கப்பட்டு நாமக்கல் ஆவின் தனியாக செயல்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நவீன பால் பண்ணை அமைக்கப்படுகிறது. நவீன பால் பண்ணைக்காக மத்திய அரசின் தேசிய பால்வள வாரியம் மூலம் மானியத்தொகை ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா தொண்டர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிகமான பா.ஜனதா எம்.பி.க்கள் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பொது செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர தலைவர் சரவணன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பூபதி, ஆன்மிக பிரிவு தலைவர் செல்வம், வக்கீல் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்