சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு ஆய்வு
|சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே எஸ்.பி. பொன்ராமு ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில் நிலைய நுழைவு வாயிலில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகிறோம். பயணிகள் உடைமைகளை முழுமையாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறோம். மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் பயணம் செய்கின்றனர். சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை சென்டிரல், எழும்பூர், கோவை, சேலம் ெரயில் நிலையங்கள் மற்றும் ரெயில் வழித்தடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி தீவிர சோதனை செய்யப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 93 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 153 வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை சுதந்திர தினம் வரை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.