தஞ்சாவூர்
இந்தியாவில் ரெயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது- எல்.முருகன்
|இந்தியாவில் ரெயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
இந்தியாவில் ரெயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
தொடக்க விழா
பாபநாசம் ெரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் ஹரிகுமார், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் (கிழக்கு) ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டு பாபநாசம் ரெயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் நின்று செல்வதற்கான தொடக்க நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேகமாக வளர்ந்து வரும் ரெயில்வே துறை
இந்தியாவில் ரெயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறை தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிதியாண்டில் ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, சென்னை எழும்பூர், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்களுக்கு ரூ.1900 கோடி மதிப்பில் சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 73 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு தலா ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.
ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மையம்
கிராமங்களில் விளையும் பொருட்கள் நகரப்பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையத்தில் வாழைப்பழம் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக கடல்பாசிக்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ.126 கோடி மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு அதற்கான திட்ட அறிக்கையும் வழங்கியுள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. இந்த கடல் பாசி அனைவருக்கும் பயன்படுவதால், அதனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும்
அதனைதொடர்ந்து கல்யாணசுந்தரம் எம்.பி. பேசுகையில், 2028-ம் ஆண்டு மாசி மகாமக விழா நடைபெறவுள்ளதால் இந்த விழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும். விழுப்புரம்-தஞ்சாவூர் இடையே இரட்டை ரெயில் பாதையும், கும்பகோணம்-விருத்தாசலம் இடையே புதிய ெரயில் பாதை சேவையும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கும், சு.கல்யாணசுந்தரம் எம்.பிக்கும் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், பாபநாசம் வர்த்தக சங்க தலைவர் குமார், பாரதீய ஜனதா கட்சி பாபநாசம் ஒன்றிய தலைவர் வி. ஆர். செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.