ரெயில்வே போலீசார் கடுமையான முறையில் சோதனை செய்து, விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் - வைகோ
|மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயிலில் தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் பலியான செய்தி அறிந்து துயரம் அடைந்தேன் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
ரெயில் பெட்டிகளில் கேஸ் சிலிண்டர் போன்ற வெடி பொருட்களை எடுத்துச் செல்வதை ரெயில்வே காவல்துறையினர் கடுமையான முறையில் சோதனை செய்து, விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து மதுரைக்கு வந்த சுற்றுலா ரெயில் 17.08.2023 அன்று மதுரை ரெயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், போடி செல்லும் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று, அந்தப் பெட்டியில் இருந்த சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் பலியான செய்தி அறிந்து பதற்றமும் அதிர்ச்சியும் மீளா துயரமும் அடைந்தேன்.
பொதுவாக இயற்கை மரணத்தையே தாங்கிக் கொள்ள முடியாத நமக்கு, தீ விபத்தில் சிக்கி பயணிகள் மரணம் அடைந்த கோர விபத்து மிகவும் கொடுமையானது. விபத்தில் உயிரிழந்த அப்பாவிகளான பயணிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகளையும், மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுகிறேன்.
தீயணைப்பு வீரர்கள், ரெயில்வே அதிகாரிகள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்புப் படையினர், வருவாய்த் துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் என அதிகாரிகள் பலரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது நமக்கு ஆறுதல் தருகிறது. ரெயில் பெட்டிகளில் கேஸ் சிலிண்டர் போன்ற வெடி பொருட்களை எடுத்துச் செல்வதை ரெயில்வே காவல்துறையினர் கடுமையான முறையில் சோதனை செய்து, இதுபோன்ற விபத்துகளை தடுத்து நிறுத்துவது இன்றியமையாத கடமையாகும்.
தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மகிழ்ச்சியுடன் வருகை தந்து எதிர்பாராத நிலையில், விபத்திற்கு ஆளாகி மரணத்தைத் தழுவியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.