திருவள்ளூர்
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட் மூடாததால் ரெயில் நிறுத்தம் - 30 நிமிட சேவை பாதிப்பு
|மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர்கள் திணறியதால் ரெயில் நிறுத்தப்பட்டு சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை-கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் உள்ள மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தைமஞ்சி, உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்களின் கோரிக்கையின் பேரில் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரெயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த நிலையில் ரெயில்வே கேட் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதனை மீண்டும் மூட முயன்றபோது, ரெயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர்கள் திணறினர்.
இதன் காரணமாக வாகனங்கள் ரெயில் தண்டவாளத்தை கடக்க முடியாமல் நின்றனர். மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்ல வேண்டிய ரெயிலும் மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக ரெயில்வே கேட்டை மூட முடியாததால் சென்னை-கும்மிடிப்பூண்டி மார்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு இரு புறங்களிலும் வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன் ரெயில்வே கேட் மூடிய பின்னர், ரெயில் சேவை மீண்டும் தொடர்ந்தது. மந்தகதியில் நடைபெற்று வரும் மீஞ்சூர் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.