< Back
மாநில செய்திகள்
பாம்பன் தூக்குப்பாலத்தில் ெரயில்வே என்ஜினீயர்கள் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாம்பன் தூக்குப்பாலத்தில் ெரயில்வே என்ஜினீயர்கள் ஆய்வு

தினத்தந்தி
|
25 Dec 2022 12:15 AM IST

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய ரெயில்வே என்ஜினீயர்கள் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். இதனால் நேற்றும் மண்டபத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டன.

ராமேசுவரம்,

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய ரெயில்வே என்ஜினீயர்கள் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். இதனால் நேற்றும் மண்டபத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டன.

தொழில்நுட்ப கோளாறு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23-ந் தேதி இரவில் ரெயில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன.

இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக நேற்று தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை என்ஜினீயர் பி.கே.குப்தா மற்றும் தெற்கு ரெயில்வே பாலங்களின் தலைமை என்ஜினீயர் சுமித் சின்ஹால் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பாம்பன் தூக்குப்பாலத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். தூக்குப்பாலத்தில் ரெயில்கள் செல்லும்போது அதிர்வுகள் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு நடந்தது.

ஆய்வுக்கு பின்னர் ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் கூறுகையில், தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளன. பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாகவே பாம்பன் ரெயில் பாலத்தில் ெரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும், என்றனர்.

மண்டபத்தில் இருந்து...

இதனுடையே 2-வது நாளாக நேற்று சென்னை செல்லும் 2 ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. அது போல் மதுரையிலிருந்து ராமேசுவரம் வரவேண்டிய பயணிகள் ரெயில் மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வர வேண்டிய ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே மீண்டும் புறப்பட்டு சென்றன.

அதாவது, மதுரை மற்றும் திருச்சி ரெயில்கள் தற்காலிகமாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்