< Back
மாநில செய்திகள்
எதிர்க்கட்சியாக இருந்தபோது ரெயில் மறியல் போராட்டம்:காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி
கடலூர்
மாநில செய்திகள்

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரெயில் மறியல் போராட்டம்:காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:07 AM IST

எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி நதிநீர் பிரச்சினையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய தி.மு.க. தற்போது அமைதியாக இருப்பது ஏன்? என்று கடலூரில் சீமான் கேள்வி எழுப்பினார்.

கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து பேசினார்.

தொடர்ந்து சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. போராட வேண்டும்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது. ஒரே நாடு என்று பேசுகிறவர்கள், ஒரே தண்ணீர் என்று ஏன் பேசுவதில்லை. ஒரே நாட்டுக்குள் தண்ணீர் கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள் என்றால், இது பக்கத்து மாநிலமா, அல்லது பகை நாடா.

கர்நாடக அரசுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். அவர்கள் கூட்டணியில் உள்ளனர். காங்கிரசை எதிர்த்து தி.மு.க. போராட வேண்டும். அதே காங்கிரசை கூட்டி வந்து ஓட்டு கேட்டால் எனக்கு பதில் சொல்ல வேண்டும்.

தமிழக உரிமையை பறிகொடுக்க...

தேர்தல் அரசியலுக்காக ஒரு தேசிய இனத்தின் உரிமையை பறி கொடுக்க தயாராகி விட்டனர். காங்கிரசும், பா.ஜ.க.வும், அந்த மாநில தேர்தலுக்காக தமிழக உரிமையை பறிகொடுக்க தயாராகி விட்டனர். காவிரி நதி நீர் பிரச்சினைக்காக வருகிற 8-ந்தேதி மிகப்பெரிய பேரணி வைத்து போராடுவேன்.

பரந்தூரில் விமான நிலையம், கடலில் பேனா சிலை வைக்க நான் விடமாட்டேன். கடவுள் மறுப்பு, பெரியார் என்பது நான் வழி நடந்த பாதை, இப்போது நான் வழி நடத்தும் பாதை. இதில் வழிபாடு வரும். இதில் கொள்கை முரண்பாடு என்பதே கிடையாது. இந்து மத எதிர்ப்பு, காங்கிரசை ஒழிப்பது தான் பெரியார் கொள்கை. ஆனால் அதை தி.மு.க. செய்கிறதா?

அமைதியாக இருப்பது ஏன்?

அன்று இந்தி தெரியாது போடா என்று எதிர்த்த தி.மு.க. தற்போது அவர்களது ஐ.டி. பிரிவுக்கு இந்தி எழுத, படிக்க தெரிந்த நபர்கள் தேவை என்று கூறுகிறது. காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது, அமைதியாக இருப்பது ஏன்?.

என்னை பற்றி பேசவில்லை என்றால் தமிழக காங்கிரஸ் தலைவரை கட்சியில் வைத்திருக்க மாட்டார்கள். அதனால்தான் அவர் பேசுகிறார்.

இவ்வாறு சீமான் கூறினார்.

மேலும் செய்திகள்