< Back
மாநில செய்திகள்
ரெயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பெருங்களத்தூரில் ரெயில் மறியல் - நடுவழியில் நின்ற மின்சார ரெயில்கள்
சென்னை
மாநில செய்திகள்

ரெயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பெருங்களத்தூரில் ரெயில் மறியல் - நடுவழியில் நின்ற மின்சார ரெயில்கள்

தினத்தந்தி
|
13 July 2022 7:27 PM IST

ரெயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால் பெருங்களத்தூரில் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் 2 ரெயில்வே கேட்கள் இருந்தன. அதில் ஒரு கேட் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, மேம்பாலம் கட்டும் பணிக்காக நிரந்தரமாக மூடப்பட்டது. இதையடுத்து புதுப்பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரே ஒரு ரெயில்வே கேட் மட்டும் தற்போது உள்ளது.

இந்த ரெயில்வே கேட் வழியாக தான் பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூா், பீர்க்கன்காரணை, சீனிவாச நகர், ஆர்.எம்.கே. நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். ஆனால், இந்த ரெயில்வே கேட் அடிக்கடி நீண்ட நேரம் மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மூடப்பட்ட ரெயில் கேட் மாலை 6.30 மணி வரை திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில் பெருங்களத்தூரில் நிறுத்தப்பட்டன. தாம்பரம்-விழுப்புரம் ரெயில் இரும்புலியூரில் நிறுத்தப்பட்டது. 3 பாதைகளிலும் ரெயில்கள் நின்றதால், சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இரவு 7 மணி வரை போலீசாரோ, ரெயில்வே அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு வரவில்லை. அதன்பின்னர் பீா்க்கன்காரணை போலீசாா் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவடி-அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை ஒட்டி இருக்கக்கூடிய சிக்னல் பாயிண்ட்டில் மழை நீர் தேங்கியது. இதனால் சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய இரு புறங்களிலும் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

எனவே, சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாகவும் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாகவும் செல்லக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தகவல் கிடைத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பழுதான சிக்னலை சரி செய்தனர். பிறகு சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக மின்சார ரெயில்கள் புறப்பட்டு சென்றது. இதனால் மாலை நேரத்தில் அலுவலகம், முடிந்து வீடுகளுக்கு சென்ற பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்