< Back
மாநில செய்திகள்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துவிழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துவிழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் 160-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் ஒவ்வொன்றாக வெளியாகி நாட்டையே உலுக்கி வருகிறது.

இதில் முக்கியமாக 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு சென்ற வீடியோ பதிவுகள் மக்களை பதற வைத்துள்ளன. மணிப்பூர் விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

ரெயில் மறியல் போராட்டம்

அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், பொருளாளர் இன்பஒளி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன், ஜெயமலர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும், மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டித்தும், இனக்கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

மேலும் அவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு காலை 11.25 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்த சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் அனைவரும் 11.40 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு 10 நிமிடம் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த போராட்டத்தினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் சவுரிராஜன் உள்ளிட்ட 48 பேர் மீது நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மேலும் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம்

இதேபோல் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விக்கிரவாண்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் சேகர் தலைமையிலும், அரகண்டநல்லூரில் வட்ட தலைவர் செல்வராஜ் தலைமையிலும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அவலூர்பேட்டையில் வட்ட செயலாளர் முருகன் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வட்ட செயலாளர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்